Saturday, November 3, 2012

அவசரம், தயவுசெய்து அதற்கோர் பெயரிடுங்கள்

அது -

'செல்பேசி'
   - செல்லும்போது மட்டும்தான்
   பேச முடியுமா?
   அல்லது 'செல்' என்பது
   விரியும் அலைவரிசையின் எல்லைக்கோட்டைக் குறிக்கிறதா?
   இருந்தாலும்-
   தமிழில் பதம் வேண்டும்.

'செல்லிடைப்பேசி'?
   - 'இடை' கவர்ச்சிக்கு சேர்க்கப் பட்டதாக்கும்?
   வேறு?

'செல்லிடப்பேசி'?
   -ம்ம்ம்...
   செல்லும் இடமெல்லாம் பேசும் கருவியா?
   அல்லது
   செல்லும் இடத்தைப் பற்றி பேசும் கருவியா?
   கொஞ்சம் பொருந்தினாற் போல்  இருந்தாலும்
   முழுதும் ஒட்டவில்லை!

'செல்போன்'    - மன்னிக்கவும்
   'பஸ்'சைப் பேருந்தாக்கும் முயற்சியே
   இன்னும் தீரவில்லை
   எங்களுக்கு!
   தயவு செய்து தமிழில்,

'கைப்பேசி'?
   - தோள்பட்டைக்கும்
   காதுக்கும் இடையில்
   கவ்விக் கொண்டு
   கைகளில் கரண்டி பிடிக்கும்
   அம்மாக்களைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு - அது
   பெயர்ப்பொருள் உணர்வது கடினம்
   வேறொரு பெயர்?

 'அலைபேசி'?
   - 2 G கருவிக்கு 'அலைபேசி' என்றால்,
   3G கருவிக்கு 'அலையோஅலைபேசி'யா?
   சொற்களை முன்பின் இட்டுப் பார்த்தால் கூட
   பேசி அலைபவனைக் குறிக்கிறதே!
   வினையாகு பெயரா?
   வினையெச்சமா?
   ஐயோ, குழப்பாதீர்கள்.

ச்சே!
அன்றாடம் பயன்படுத்தும்
ஒரு கருவி - இதை
ஒரு தமிழனே கண்டுபிடித்து
'கிணிங்கிணி' என்று
பெயரிட்டு இருந்தாலும்
தேவலாம்!

   தயவுசெய்து
   நறுந்தமிழில்  
   பொருள் உணர்த்தும்
   ஒரே ஒரு பெயரிடுங்கள் - சீக்கிரம்
   உடனடியாக
   இளந்தமிழுக்கு
   ஒரு
   உபயமிடுங்கள்!

   உங்களுக்கு என்
   அடுத்த வேண்டுகோள்
   'ஸ்மார்ட் போன்'
!!!('அதிமேதாவியிடைபேசி?!!')

திருடர்கள் ஜாக்கிரதை

மரியாதைக்காக அல்ல - அது
பலர் பால் பொருள்படும்
பேருந்தில்
பக்கத்தில் நிற்பவள் - உன்
தோள்மீது மார்பு உரசுகையில் - கவனம்
த்ரிஷா அல்லது திவ்யாவுக்கு பதில்
உன் கைப்பையில் இருக்கும்
தீபாவளி முன்பணமும்
கடன் அட்டைகளும்
உன் நினைவில் வரட்டும்!

பிச்சிக்கிச்சு

நெடு நாட்கள்
கழித்தே தெரியும்
பௌதிகத்திற்கும்
கௌதமருக்கும்
ஒரு சம்பந்தமும் இல்லை என்பது

சந்தை

தண்ணீர் விற்பனைக்கு
விக்கல் இலவசம்

நாட்கள் நகர நகர...

தினசரி நாட்காட்டியில்
ஆணி அடிக்கப் பட்டிருக்கும்
திகதிக் காகிதங்கள்
நம்பிக்கை.
மாத நாட்காட்டியில்
தொக்கி நிற்கும் - அடுத்த ஆண்டின்
சனவரி மாதம்
தலைக்கனம்!

அவ பாக்குறா

தேனில் இருக்கும்
வண்டை
முகர்ந்து பார்க்கிறது
மலர்!

அஃறிணைகள்

என் அருமை
நண்பர்கள்,
என்னவாக ஆக
நினைத்தாலும்
'அது'வாகவே
ஆகி விடுகிறார்கள்!

Thursday, September 13, 2012

பொடியனின் இதர செலவுகள்...


நாலணாவுக்கு நாலு தேன்மிட்டாய்,
ஐம்பது பைசா பப்புல் காம்,
ஒரு ரூபா சேமியா ஐஸ்,
கோலி பாட்டில் கருப்பு கலர் ரெண்டார ரூபா,
அஞ்சு ரூபா குட்டிக் கார்,
பத்து ரூபாய்க்கு தியேட்டரில் புதுப்படம்,
இருபது ரூபா துப்பாக்கி,
அம்பது ரூபா கைக்கடிகாரம்,
என
பொடியனின் இதர செலவுகள் ஏறிக்கொண்டே   போயின...
அவன் வயதோடு சேர்ந்து!

Friday, September 7, 2012

சுழலும் சக்கரம்

கனவு காண்பதென்றால்
அத்தனை மகிழ்ச்சி
பொடியனுக்கு!

கற்பனை
அவனுக்குத் தானாய் வந்து கொட்டும்.

பனிரெண்டாம் வகுப்பு
இறுதித் தேர்வில் பொடியன்,
இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்
விடையளிக்கும் கேள்விக்கு
சிந்தித்தான்,
சிந்தித்தான்,
சிந்தித்துக் கொண்டே இருந்தான்.

பொடியன் அறிவான்,
தன் விடைகளின் மதிப்பெண்கள்
நான்கு சுவருக்குள்
தேநீரும் வடையும் பிஸ்கோத்தும்
மற்ற சில விடைத்தாள்களும்
நிறைந்த மேசையில்
சிவப்போ அல்லது பச்சை நிற மையோ
கொண்டு நிரப்பப்படும் என்பதும்,
தன் விடைத்தாளை
எடுக்கும் நேரத்தில்
திருத்துபவரின் தலைக்கு மேல்
வீடு அமர்ந்திருக்கும்
கிரகங்களின் நிலையைப்
பொறுத்தே அந்த மதிப்பெண்ணும்
அமையும் என்பதும்.

இருந்தும்,
புதிதுபுதிதாய் சிந்தித்தான்
விதவிதமாய்  கற்பனை செய்தான்
என்னவெல்லாம் எழுதலாம் என்று திட்டமிட்டான்.

தேர்வு முடிய அரைமணி நேரம் முன்
அடித்த முதல் மணி
பொடனி வழியே
சுயநினைவைக் கொண்டு வந்து சேர்த்தது
பொடியனுக்கு!

சிந்தித்த நேரம்
விரயம் விரயம்
என நொந்து
அரைமணி நேரத்தில்
இயன்றதை எழுதி சமர்ப்பித்தான்
பாவம்.

இப்போது
இன்று
வாழ்க்கையை எப்படி எல்லாம்
வாழலாம் என்று
கற்பனை செய்து
திட்டம் வரைந்து கொண்டு இருக்கிறான்
பொடியன்!

பாவம்
எப்போது அடிக்குமோ தெரியாது
அல்லது அடிக்குமோ அடிக்காதோ தெரியாது
அந்த முதல் மணி!
                                                                                        -கிர்பால்

Saturday, April 21, 2012

பரம பதம்

சுற்றமும் நட்பும் கூட்டி
பரம பதம் விளையாடுவான் பொடியன்.

புளியங்கொட்டை, செங்கல்,
பித்தளைக் கம்மல்
போன்ற அரிய பல காய்களுக்கு நடுவில்
எப்பொழுதும்
சிவப்பு நிற
சட்டைப் பொத்தான் பொடியனுடையது.

படிப் படியாய் ஏறி எல்லோருக்கும் முன்னால்
பரமன் பதம் தொட்டு விடுவான்
வழக்கமாக.

எப்போதும் முதல் ஆளாய் வெல்வதால்
அவன் ஆட்டமும் பாட்டமும் தாங்க முடியாது முன்பு!

சிவப்பு நிற பொத்தான் தொலைந்து போன
அந்த துரதிர்ஷ்ட நாளில் இருந்து
அவன் இறங்காத பாம்பில்லை!

எல்லோரும் மோட்சம் பெற்ற பிறகும்
நாலைந்து சுற்று சுற்றி வந்தே ஏறுவது என்றானது.

ஏழு பிறப்பிலும்
ஏழு கடல்,
ஏழு மலை தாண்டியும்
இனி
கிடைக்கக் கடினமானது,
யாரோ
கடித்துத் துப்பிவிட்ட
சிவப்புப் பொத்தான்.

பின் ஒரு நாள்,
"மோட்சமாவது
நாய் மூச்சாவாவது" என்று சொல்லி
கோபம் வந்து
கிழித்து எரிந்து விட்டான்
பரம பத அட்டையை!

இனி எவருக்கும் கிட்டப்பெறாததானது மோட்சம்..!

Friday, April 20, 2012

திராட்சைத் தோட்டத்துக் காற்று

திராட்சைத் தோட்டத்துக் காற்றை நாசியில் நுகர்ந்தபடியே, 
வாயை அகலத் திறந்து
நாக்கை மடக்கி நக்கிப் பார்த்தான் பொடியன்... 

நறுமணம் சுமந்து வந்த காற்றில் திராட்சை ரசச் சுவை ஏன் இல்லாமல் போனது? 

மீண்டும் 
நாசி நிறைய நறுமணத்தை நிரப்பிக் கொண்டு 
உண்ணாமல் ஊர் சுற்ற ஓடிப் போனான். 

அவன் பின்னால் துரத்தி ஓடிப் போனது திராட்சைத் தோட்டத்துக் காற்று...

Wednesday, March 7, 2012

புதிய போராட்டம்...

மன உறுதி கொள்,
புத்தியைக் கூர்மையாக்கு,
பார்வையைத் தெளிவாக்கு,
விரல்களை ஆயுதமாக்கு,
ஒவ்வொரு நொடியையும் உற்று கவனி,
ஒரு மனதாக்கு,
இறைவனைத் துணைக்குச் சேர்,
நம்பிக்கை வை,
தோல்வியை நினைத்து வருந்தாதே,
வென்றால் நீ இலட்சத்தில் ஒருவன்,
குறுக்கு வழியை எண்ணாதே,
"Payment Option" வரை சென்று விட்டால்
வென்று விடலாம்
சொல்ல மறந்து விட்டேன்,
தத்கால் இரயில் முன்பதிவுக்கு அடையாள அட்டை அவசியம்
ஏதாவது ஒரு அடையாள அட்டை எண்ணை
முன்கூட்டியே 8 மணிக்கு முன்னால் எடுத்து வைத்துக் கொள்!

மகளிர் தினம்...


அன்பு, ஆறுதல், அறிவு, துணை...
என் வாழ்வை அழகாக்க
அனைத்தையும் அளித்தாய்!
அம்மா,
அக்கா,
தங்கை,
தோழி
என்று பல முகங்களில்
என் உலகை நிறைக்கின்ற
பெண் என்னும் பேருண்மையே!
இந்த நாளை உனக்கு அர்ப்பணிக்கின்றேன்,
எந்த நாளும் உந்தன்
கருணை இன்றிக் கழிவதில்லை என்று....

Friday, February 17, 2012

களிமண் - ஒரு குட்டிக் கதை

யாரோ கொடுத்த ஒரு பிடிக் களிமண்ணை
ஆசையோடு வாங்கி - அதில்
தனக்குப் பிடித்த பொம்மை ஒன்றை
தானே செய்து
தனக்கே தனக்கென்று வைத்துக் கொண்டாள்
அந்தக் குழந்தை...
அதனோடு விளையாடினாள்,
அதனோடு பேசினாள்,
அதனோடு கொஞ்சினாள்,
தன் படுக்கையில் அருகில் வைத்துப் படுத்துக்கொண்டாள்,
நெடு நாட்கள்
களிமண்ணை பொம்மையாக்கின கர்வம் கொண்டிருந்தாள்.
அவளே,
வளர்ந்து
மணம் முடித்த பின்
தன் கணவனைத் திட்டும் போது சொன்னாள் இப்படி -
"களிமண்ணு மண்ட! இத ஏந்தலைல கட்டிட்டாங்க..."
என்ன சொல்ல,
களிமண்ணை பொம்மையாக்கும் கலை மறந்து விட்டாள் என்க!