Sunday, November 28, 2010

நந்தலாலா - அணிந்துரை


ந்தலாலா ஒரு அருமையான திரைப்படம். கலைஞர்கள் முதலில் தங்கள் படைப்பைக் காசாக்கப் பாடுபடுவார்கள். பிறகு காசுக்காக கலையைப்படைக்கப் பாடுபடுவார்கள். இது கலைஞர்களின் வியாதி. இது தான் கலைப்படம், வர்த்தக ரீதியான படம் எனத் தரம் பிரிக்கச் செய்கிறது. ரசிகர்களின் ரசனையின் தரமும் ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளவேண்டும். மணிரத்னம் போல், 'நான் எனக்குக் கைவந்த கலையைப் படைப்பேன், ரசிப்பதும் ரசிக்காததும் தனி மனிதனின் விருப்பம்' என்னும் கலைஞர்கள் பொக்கிஷமானவர்கள். அப்படித் துணிச்சலாக எடுக்கப்பட்ட முழு நீளத் திரைப்படம் நந்தலாலா. மிஷ்கின் ஒரு உண்மையான கலைஞன்! தமிழ் இரசிகர்களின் தரம் மிளிர்ந்து இருப்பதால் 'நந்தலாலா' வர்த்தக ரீதியான கலைப்படமாக வெற்றி பெரும்.

ந்தலாலா பார்த்த பொழுது ஒரு அழகான நாவலைப் படித்த அனுபவம் ஏற்பட்டது. திரைவடிவத்தில், குறைவான வசனத்தில், நிறைவான காட்சிகளில் கதை படித்தது அற்புதமான அனுபவம். இளையராஜாவின் இசையோடு கதை படித்தது மனதில் உணர்ச்சிப் பெருக்கெடுக்க வைத்தது. ஜப்பானியத் திரைப்படமான கிகுஜிரோவின் மொழிப்பெயர்ப்பு நந்தலாலா. ஆனால் கிகுஜிரோவிற்கும் நந்தலாலாவிற்கும் திரைக்கதையில் சில குறிப்பிடத் தகுந்த வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக நந்தலாலாவின் கனமான க்ளைமாக்ஸ்.

காதல், இரத்தம், துரோகம், பாலியல், பிரம்மாண்டம் - இவையெல்லாம் காசு பண்ணும் கலைஞர்கள் கட்டிப் போராடும் கதைக் கருக்கள். காசு கொடுத்துப் படம் பார்க்கும் இரசிகர்களுக்குத்தான் அத்தனை சலிப்பும் ஏமாற்றமும். நந்தலாலா, 'அன்பை' மையமாக வைத்துக் கதை சொல்கிறது. அதுவே உண்மையான இரசிகர்களுக்குத் திருப்தி அளிக்கிறது.

அம்மாவைத் தேடிச் செல்லும் இருவரின் கதை என்பது நந்தலாலாவின் ஒரு வரிச் சுருக்கம். ஒருவன் அன்பால் தேடுகிறான், மற்றொருவன் கோபத்தால் தேடுகிறான் என்பது சுவாரசியம். பயணக் கதைக்குரிய வித்தியாசமான மனிதர்களின் சந்திப்பு, ஓட்டம், சிரிப்பு, அழுகை, பெருமிதம் எனக் கதை நகர்கிறது. தார்ச் சாலையின் வெப்பத்தை நாம் சுவாசிக்க முடிகிறது. ஒளிப்பதிவு பிரமாதம். அன்பின் ஏக்கத்தைக் காட்சிகள் விளக்குகின்றன. தாத்தா பாட்டியின் பராமரிப்பில் இருக்கும் சிறுவன் 'அகி' தன் அம்மாவைத் தேடிப் பயணிக்கிறான், மனநல மருத்துவமனையில்இருந்து வெறுப்புடன் தப்பி சாலையில் பயணிக்கிறான் பாஸ்கர் "uncle". அகி "அன்னவயல்" நோக்கிப் பயணிக்கிறான், பாஸ்கர் "தாய்வாசல்" நோக்கிப் பயணிக்கிறான். அகியும் பாஸ்கரும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சந்திக்கிறார்கள். இருவரும் தங்கள் பணத்தைப் பறிகொடுத்த நிலையில் ஒருவருக்கு ஒருவர் துணை ஆகின்றனர். (இங்கு "uncle" பாஸ்கர் பறிகொடுப்பது சில்லறைகள், சிறுவன் அகி பறிகொடுப்பது சிலநூறு ரூபாய். இரசிக்க வேண்டிய முரண். இது போல் படம் நெடுக இரசனை மிகுந்த காட்சிகள் ஏராளம்). 'ஒருவருக்கு ஒருவர் துணை இங்கு, அன்பு மட்டும் அனாதையா?' என்ற கேள்விக்குப் பதில் பயணத்தில் இவர்கள் சந்திக்கும் மனிதர்களிடம். அங்கங்கு இழையோடும் நகைச்சுவை இரசிகர்களிடம் இருந்து கைதட்டல் சேர்க்கிறது. திரைக்கதை சலிப்பூட்டவில்லை. அம்மாவைத் தேடிச் சென்றவர்கள் இறுதியில் அம்மாவைக் கண்டுபிடிக்கின்றார்கள். அன்பு செலுத்துபவள், அன்புக்காக ஏங்குபவள் அம்மா என்றால், அகிக்கு 'அவள்' தான் அம்மா. தப்பை மன்னித்து ஆதரவு தந்து அரவணைப்பது அம்மா என்றால், அவளுக்கு 'அவன்' அம்மா. அன்பு வாழ்க்கையை அழகாக்குகிறது!

நந்தலாலாவைப் போற்ற வேண்டும். இது போன்ற தரமான முழு நீளத் திரைப்படங்கள் தமிழில் இன்னும் நிறைய எடுக்கப்பட வேண்டும். நம் உண்மையான இரசனையைப் பகிர்ந்து கொள்வோம் நண்பர்களே... :-)