Friday, February 3, 2023

வாழ்!

இவ்வளவு வேகமாய் எங்கே போகிறோம்?

நின்று நிதானித்து

வாழ்க்கையை ரசித்த நாட்கள் 

வெகு தொலைவில் ஓடி விடவில்லை!

இன்று என் கட்டை விரலும் ஓடுகின்றது

கைப்பேசி தொடுதிரையின் மேல்!

Sunday, July 17, 2022

காணாமல் போனவர்கள்..!

"காணாமல் போக வேண்டும்" என்றால்

தேடி,

கண்டு,

மகிழ்ந்து,

உறவாட

ஒருவராவது வேண்டும்!Tuesday, April 19, 2022

கங்காரு குட்டிகுட்டியைச் சுமந்து நிற்கும் கங்காரு 

என ஆகிய

மரம்!

இடம்: சென்னை தியாகராய நகர் G.N செட்டி சாலை

Thursday, June 24, 2021

அமராவதி என் கண்ணம்மா!

 என் உயிர்த்துளியின் ஒரு துளியே,

என் கண்மணியே,

பிறக்காமலே இறந்த என் மகளே!

கருவறையின் வாசல் வரை வந்து

விண்ணிற்குச் சென்றாய் ஏனடி?


என்னைப் போல் இருந்தாய் என்று

உன் தாத்தா பாட்டி சொன்னார்கள்,

என் கண்களைக் கொண்டிருந்தாயோடி 

என் செல்லமே?


முதன்முதல் "அம்மா" என்று சொல்லலாமா,

"அப்பா" என்று சொல்லலாமா என்று யோசித்து வைத்திருந்தாயோ?


உன் அம்மாவின் செவி வழியே

என் குரலை நீ கேட்டிருந்தாயோடி?

உன்னை "சக்கரைக்கட்டி", என்று நாங்கள் செல்லம் கொஞ்சியதைக் கேட்டு மகிழ்ந்து இருந்தாயோ?


உயிரோடு உயிராக

அம்மா உன்னை வயிற்றில் வளர்க்க,

நான் உன்னை என் மனதில் வளர்க்க,

எங்களிடம் இருந்து

உன்னை

எது வந்து கொண்டு போனதடி கண்ணம்மா???

Thursday, April 29, 2021

வழி - வேட்கை

அறம் போற்றும் 

மதங்கள் அனைத்தும் 

வழித்தொடர்வேன்,

மனிதம் காக்கும் கடவுளரைத்

தொழுவேன் என்றும்,

ஆனால்,

எனக்கு எப்பொழுதும் எந்த மதமும் 

பிடிப்பதில்லை,

மதம் பிடித்தால்

மனிதனும் மிருகம் 

அன்றோ!

Sunday, December 15, 2019

என்னுள் அவள்!

ஓரிரு நாட்களாய் ,
என்னுள் ஒலிக்கும் என் குரலோடு
இன்னொரு குரலும் சேர்ந்து கொண்டது!

மனமே சாட்சியாக...
என்னுள் நுழைந்து கொண்டாள் அவள்!

Wednesday, August 7, 2019

காதல் இலக்கணம்

காதல் -
வினைச்சொல் எனில் கலத்தல்,
பெயர்ச்சொல் எனில் அவள்!
காமத்தோடு பகுத்தறியாதாருக்கு
இடக்கரடக்கல்..

உமையவளின் பாதம்

மல்லிகைப்பூவில் செய்த பாதம்,
கயிலையின் குளிர் நிறைந்திருக்கும்!

செல்லும் இடமெல்லாம் செழிக்க,
பூமியில் இறங்கி நடந்தது.

சில நேரங்களில்
கண்ணாடிச் சில்லுகள் குத்தின,

சில இடங்களில்
சிகரெட் துண்டுகள் சுட்டன,

இரவில் இறங்கினால்
பாதம் சிவக்க ஓட நேர்ந்தது!

பெண் பித்தர்கள் நிறைந்த நகரங்களில்
இரத்தச் சகதியில் பாதம் நனைந்தது!

போதும்! போதும்!! என்று
கயிலை திரும்பியவளை
உச்சகட்ட அவமானமாக
அக்கினிப் பிரவேசம் செய்து
கற்பை நிரூபிக்கச் சொல்லி சிவன் சொல்ல,


கண்சிவந்து,
 சிவனை நோக்கி,
"என்னைத் தொடரும் இராட்சசர்களை
நானே அழிப்பேன்" என கர்ஜித்து
ஆண் உள்ளம் கொண்டு
உமையவள் திரும்பி நடந்த கணம்,

சிவன் நெஞ்சில்
கருணை சொறிந்து,
பெண்ணென்னும் பேரன்பினால்
கர்வம் தணிந்தது!

அன்று
பெண்ணுள்ளம் பெற்ற சிவனை
ஆணுள்ளம் பூண்ட அன்னை
மன்னித்தருளினாள்

ஆணும் பெண்ணும் சமமானோம்!

பெண்ணே!
நீ வாழ்க!
அன்பு,
கருணை,
மன்னிப்பு
என நீ போற்றும்
"பெண்மை" வாழ்க!
ஆண் கர்வம் தணித்து
 என்னுள் நீ வார்த்த "பெண்மை"
நீடூழி வாழ்க!

Wednesday, January 30, 2019

ஆசைக்கனவுகள்

நாட்கள் நகர நகர
கனவுகளின் சுமையைத்
தாங்க முடியவில்லை!


என் சின்னஞ்சிறு
ஆசைகளில் பிறந்த கனவுகளைத்
தூக்கி எறியவும் மனமில்லை!


கனவுகள் வளர்ந்து வளர்ந்து
உடலின் ஒரு பாகம் போல்
ஒட்டிக் கொண்டன!


நிறைவேறாத கனவுகள்,
பெருகிப் பெருகி
நினைவுலகில் வழிந்து படிந்துவிட்டன!


சுயநலம் மேவிய கனவுகள் என்னை,
அவள் இல்லாத அவளும்,
அவர்கள் இல்லாத அவர்களும்
அவை இல்லாத அவைகளும்
உலவுகின்ற உலகில்,
தள்ளிவிட்டன!


கனவு வெளியின்
நினைவு விட்டத்தில்
உயிர்,
பலமுறை தூக்கிட்டுக் கொண்டது!


போதும்!


இந்த உடலை விட்டு விடும் நாளொன்றில்,
மெல்ல மெல்ல
தானே கரைந்து மறைந்துவிடும்
என் ஆசைக்கனவுகள்!Sunday, July 15, 2018

பேரன்பு

இன்று பேரன்பு திரைப்படத்தின் வெள்ளோட்டம் பார்த்தேன். பிடித்திருந்தது. முதலில் வேறு எதுவும் தோன்றவில்லை. சராசரி தமிழ்த் திரைப்பட இரசிகனைப் போல் மிஷிக்கின் "இருட்டு அறையில் முரட்டுக் குத்து" தலைப்பை ஒப்பிட்டு பேரன்பு திரைப்படத்தை உயர்த்திப் பிடித்து பேசியதைப் பார்த்துவிட்டு, அடுத்தடுத்து திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனைத்து தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களின் பேச்சைக் கேட்ட பின்பு தான் கதையின் கருவைப் பற்றி ஓரளவு புரிதல் கிடைத்தது.


பேரன்பு திரைப்படம், ஒரு மாற்றுத்திறனாளி மகளுக்கும் அவள் தந்தைக்குமான நிகழ்வுகள் பற்றிய திரைப்படம் என்று புரிந்தது.


https://www.youtube.com/watch?v=ue6KOZdZIOw


மீண்டும் திரைப்படத்தின் வெள்ளோட்டத்தைப் பார்த்தேன். மம்மூக்காவின் விழிகளில், நான் பக்கத்தில் இருந்து பார்த்த என் தாத்தாவின் வலிகளும் மன உறுதியும் தெரிந்தன!


மம்மூக்காவின் முகத்தில் கண்ட உணர்வுகளில், என் தாத்தா மட்டுமே என் நினைவுகளை நிறைத்திருந்தார்.


இப்போது மணி இரவு 10:30, தேதி ஜூலை 15 2018. இதை எழுதாமல் எனக்கு இனி உறக்கம் வராது.


என் அம்மாவின் கடைசித்தம்பி, என் இரமேஷ் மாமா, விதியின் பிடியில் உடல்நலக்குறைவால் பிறர் உதவியின்றி தனியே தானாக இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவர். சூலூர் REC கல்லூரியில் முதலாமாண்டு B.B.A. படிக்கும் போது கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தலையில் நீர்கோர்த்து விட்டதால் உயிரைக் காப்பாற்றுவது கடினம் என்று திருப்பூரில் மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் இரவோடு இரவாக கோவை கொண்டு சென்று நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரைப் பிடித்து மாமாவின் உயிரை மீட்டெடுத்து வந்தார் தாத்தா. அன்று வருடம் 1992. நான் பள்ளியில் மூன்றாவது படித்துக் கொண்டிருந்தேன்.


மூலையில் கடினமான அறுவை சிகிச்சை செய்ததன் விளைவாக ஞாபக மறதி, பக்கவாதம், மற்றும் சில உடல்நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டார் இரமேஷ் மாமா. அன்று முதல் பதினைந்து ஆண்டுகள் தாத்தா மாமாவைப் பார்த்துக் கொண்ட விதம் மகோன்னதமான வாழ்வியல் பாடம்.


2008 இல் என் தாத்தா இறந்தார் - link
2013 இல் என் மாமா இறந்து போனார் - link


பேரன்பு திரைப்படத்தை நான் நிச்சயம் பார்க்க வேண்டும் என்பதற்குக் காரணம் - படம் எனக்கு எப்படிப்பட்ட அனுபவத்தைத் தரப்போகிறதோ தெரியாது, ஆனால் நிச்சயம் மாமூக்காவின் முகத்தில் மறைந்த என் தாத்தாவின் உணர்வுகளைப் பார்ப்பேன்! தாத்தாவுடைய உன்னதமான உணர்வுகளோடு மீண்டும் பயணிப்பேன் என்று எதிர்பார்க்கிறேன்.


வாழ்க திரைப்படக்கலை!


-Kirpal,
Rocky Hill, CT
15 Jul 2018