Sunday, December 15, 2019

என்னுள் அவள்!

ஓரிரு நாட்களாய் ,
என்னுள் ஒலிக்கும் என் குரலோடு
இன்னொரு குரலும் சேர்ந்து கொண்டது!

மனமே சாட்சியாக...
என்னுள் நுழைந்து கொண்டாள் அவள்!

Wednesday, August 7, 2019

காதல் இலக்கணம்

காதல் -
வினைச்சொல் எனில் கலத்தல்,
பெயர்ச்சொல் எனில் அவள்!
காமத்தோடு பகுத்தறியாதாருக்கு
இடக்கரடக்கல்..

உமையவளின் பாதம்

மல்லிகைப்பூவில் செய்த பாதம்,
கயிலையின் குளிர் நிறைந்திருக்கும்!

செல்லும் இடமெல்லாம் செழிக்க,
பூமியில் இறங்கி நடந்தது.

சில நேரங்களில்
கண்ணாடிச் சில்லுகள் குத்தின,

சில இடங்களில்
சிகரெட் துண்டுகள் சுட்டன,

இரவில் இறங்கினால்
பாதம் சிவக்க ஓட நேர்ந்தது!

பெண் பித்தர்கள் நிறைந்த நகரங்களில்
இரத்தச் சகதியில் பாதம் நனைந்தது!

போதும்! போதும்!! என்று
கயிலை திரும்பியவளை
உச்சகட்ட அவமானமாக
அக்கினிப் பிரவேசம் செய்து
கற்பை நிரூபிக்கச் சொல்லி சிவன் சொல்ல,


கண்சிவந்து,
 சிவனை நோக்கி,
"என்னைத் தொடரும் இராட்சசர்களை
நானே அழிப்பேன்" என கர்ஜித்து
ஆண் உள்ளம் கொண்டு
உமையவள் திரும்பி நடந்த கணம்,

சிவன் நெஞ்சில்
கருணை சொறிந்து,
பெண்ணென்னும் பேரன்பினால்
கர்வம் தணிந்தது!

அன்று
பெண்ணுள்ளம் பெற்ற சிவனை
ஆணுள்ளம் பூண்ட அன்னை
மன்னித்தருளினாள்

ஆணும் பெண்ணும் சமமானோம்!

பெண்ணே!
நீ வாழ்க!
அன்பு,
கருணை,
மன்னிப்பு
என நீ போற்றும்
"பெண்மை" வாழ்க!
ஆண் கர்வம் தணித்து
 என்னுள் நீ வார்த்த "பெண்மை"
நீடூழி வாழ்க!

Wednesday, January 30, 2019

ஆசைக்கனவுகள்

நாட்கள் நகர நகர
கனவுகளின் சுமையைத்
தாங்க முடியவில்லை!


என் சின்னஞ்சிறு
ஆசைகளில் பிறந்த கனவுகளைத்
தூக்கி எறியவும் மனமில்லை!


கனவுகள் வளர்ந்து வளர்ந்து
உடலின் ஒரு பாகம் போல்
ஒட்டிக் கொண்டன!


நிறைவேறாத கனவுகள்,
பெருகிப் பெருகி
நினைவுலகில் வழிந்து படிந்துவிட்டன!


சுயநலம் மேவிய கனவுகள் என்னை,
அவள் இல்லாத அவளும்,
அவர்கள் இல்லாத அவர்களும்
அவை இல்லாத அவைகளும்
உலவுகின்ற உலகில்,
தள்ளிவிட்டன!


கனவு வெளியின்
நினைவு விட்டத்தில்
உயிர்,
பலமுறை தூக்கிட்டுக் கொண்டது!


போதும்!


இந்த உடலை விட்டு விடும் நாளொன்றில்,
மெல்ல மெல்ல
தானே கரைந்து மறைந்துவிடும்
என் ஆசைக்கனவுகள்!