Friday, July 31, 2009

மழை ஓய்ந்த அகால வேளை


சிறகு கனத்த பட்டாம்பூச்சிகள்
இலைகளுக்குக் கீழே பதுங்கியிருக்க,
ஈசல்பூச்சிகளுக்குக் கொண்டாட்ட வானம்!!!

Saturday, July 18, 2009

காணாமல் போனவர்கள்..!


ஆச்சர்யப்பட்டேன்!
யார் காணாமல் போனாலும்
அறிவிக்கும்
தொலைக்காட்சிப் பெட்டியைக் கண்டு...

பக்கத்துத் தெரு
கோவிந்து மாமா காணாமல் போனபோதுகூட
அறிவித்திற்று!

தெருவே அதை
அரிதாகவும் பரபரப்பாகவும்
பேசிக்கொண்ட போது
அம்மாவிடம் கேட்டேன்,
'காணாம போன என்னோட சிலேட்ட ஏம்மா
காட்டமாட்டேங்குது?'

அம்மா சொன்னாள்,
'மனுசங்க காணாமப் போனா மட்டுந்தான்டா
சொல்லும்'.

ஆர்வம் பொங்கிய
நாள் ஒன்றில்
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புக்குச்
சற்று முன்
கட்டிலுக்குக் கீழே ஒளிந்து கொண்டேன்!

கற்பனையில்
கேட்டு ரசித்தேன்,
'காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு...
பெயர், கிர்பால்...
வயது, ஆறு...
காணாமல் போன போது
பச்சை நிற சட்டையும்
அரை டிரவுசரும் அணிந்திருந்தான்!'

புன்னகைத்தபடியே
காதைத் தீட்டி வைத்தேன்!

அறிவிப்பும் முடிந்தது
என் பெயரும் அறிவிக்கப்படவில்லை!

வெளியே எழுந்து சென்று
தொலைக்காட்சிப் பெட்டியைக்
கோபமாய் முறைத்துக் கொண்டிருந்தேன்!

எனைக் கண்டு
அம்மா கேட்டாள்,
'இத்தன நேரம் எங்கடா கண்ணு போயிருந்த?'

உள்ளிருந்து விம்மியபடியே
கண்ணீர் விட்டு அழத்தொடங்கியிருந்தேன்!

Wednesday, July 8, 2009

மென்மையாகிப் போனவர்கள்...

கடவுளர் காணாமல் போகின்ற
பொன்மாலை வேளை!
ஓர் பட்டாம்பூச்சி வருவதைப் பார்க்காமல்
மலர்ச்சாலை ஒன்றைக் கடக்க முயன்றேன்!

என்னைக் கண்டு திடுக்கென்று திரும்பிய பட்டாம்பூச்சி
ரோஜாப்பூவில் மோதி விழுந்தது!

அச்சத்தில் நின்ற என்னை,
'பார்த்து வரக்கூடாதா? மோதியிருந்தால் என்ன ஆகியிருக்கும் உனக்கு?'
என்றது அன்போடு.

மன்னிப்பு கேட்டு நின்ற என்னிடம்,

(பட்டாம்பூச்சி) 'எங்கே அவசரமாக ஓடிக்கொண்டு இருக்கிறாய்?'
(நான்) 'என் தேவதையைத் தொலைத்து விட்டுத் தேடுகிறேன்'

சற்றே கோபமாகிய பட்டாம்பூச்சி,
'எத்தன பேர்றா இப்படிக் கெளம்பி இருக்கீங்க? வூட்ல சொல்ட்டு வன்டியா?' -
என்று திட்டிக்கொண்டே பறந்துவிட்டது!