Sunday, July 15, 2018

பேரன்பு

இன்று பேரன்பு திரைப்படத்தின் வெள்ளோட்டம் பார்த்தேன். பிடித்திருந்தது. முதலில் வேறு எதுவும் தோன்றவில்லை. சராசரி தமிழ்த் திரைப்பட இரசிகனைப் போல் மிஷிக்கின் "இருட்டு அறையில் முரட்டுக் குத்து" தலைப்பை ஒப்பிட்டு பேரன்பு திரைப்படத்தை உயர்த்திப் பிடித்து பேசியதைப் பார்த்துவிட்டு, அடுத்தடுத்து திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனைத்து தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களின் பேச்சைக் கேட்ட பின்பு தான் கதையின் கருவைப் பற்றி ஓரளவு புரிதல் கிடைத்தது.


பேரன்பு திரைப்படம், ஒரு மாற்றுத்திறனாளி மகளுக்கும் அவள் தந்தைக்குமான நிகழ்வுகள் பற்றிய திரைப்படம் என்று புரிந்தது.


https://www.youtube.com/watch?v=ue6KOZdZIOw


மீண்டும் திரைப்படத்தின் வெள்ளோட்டத்தைப் பார்த்தேன். மம்மூக்காவின் விழிகளில், நான் பக்கத்தில் இருந்து பார்த்த என் தாத்தாவின் வலிகளும் மன உறுதியும் தெரிந்தன!


மம்மூக்காவின் முகத்தில் கண்ட உணர்வுகளில், என் தாத்தா மட்டுமே என் நினைவுகளை நிறைத்திருந்தார்.


இப்போது மணி இரவு 10:30, தேதி ஜூலை 15 2018. இதை எழுதாமல் எனக்கு இனி உறக்கம் வராது.


என் அம்மாவின் கடைசித்தம்பி, என் இரமேஷ் மாமா, விதியின் பிடியில் உடல்நலக்குறைவால் பிறர் உதவியின்றி தனியே தானாக இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவர். சூலூர் REC கல்லூரியில் முதலாமாண்டு B.B.A. படிக்கும் போது கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தலையில் நீர்கோர்த்து விட்டதால் உயிரைக் காப்பாற்றுவது கடினம் என்று திருப்பூரில் மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் இரவோடு இரவாக கோவை கொண்டு சென்று நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரைப் பிடித்து மாமாவின் உயிரை மீட்டெடுத்து வந்தார் தாத்தா. அன்று வருடம் 1992. நான் பள்ளியில் மூன்றாவது படித்துக் கொண்டிருந்தேன்.


மூலையில் கடினமான அறுவை சிகிச்சை செய்ததன் விளைவாக ஞாபக மறதி, பக்கவாதம், மற்றும் சில உடல்நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டார் இரமேஷ் மாமா. அன்று முதல் பதினைந்து ஆண்டுகள் தாத்தா மாமாவைப் பார்த்துக் கொண்ட விதம் மகோன்னதமான வாழ்வியல் பாடம்.


2008 இல் என் தாத்தா இறந்தார் - link
2013 இல் என் மாமா இறந்து போனார் - link


பேரன்பு திரைப்படத்தை நான் நிச்சயம் பார்க்க வேண்டும் என்பதற்குக் காரணம் - படம் எனக்கு எப்படிப்பட்ட அனுபவத்தைத் தரப்போகிறதோ தெரியாது, ஆனால் நிச்சயம் மாமூக்காவின் முகத்தில் மறைந்த என் தாத்தாவின் உணர்வுகளைப் பார்ப்பேன்! தாத்தாவுடைய உன்னதமான உணர்வுகளோடு மீண்டும் பயணிப்பேன் என்று எதிர்பார்க்கிறேன்.


வாழ்க திரைப்படக்கலை!


-Kirpal,
Rocky Hill, CT
15 Jul 2018



1 comment:

Anonymous said...

I read your topic unique information sharing. I shared post Vehicle towing company. It is best training provide. It is very useful content. Thanks for posting.