Wednesday, August 18, 2010

மழை எப்போது அழகாகின்றது?

மழையில் நடப்பதோர் வரம்!
'மழை எப்போது அழகாகின்றது?' - என்று
மனதோடு அலசிக்கொண்டே நடப்பது அனுபவம்!

மழை அழகு,
நனைந்து சிலிர்த்து நிற்கும்
மரங்களை மீண்டும் மீண்டும்
நனைக்கும் போது!

மழை அழகு,
தேங்கி நிற்கும் நீரில் மிதக்கும்
கத்திக்கப்பலில் துளித்துளியாய் ஏறி
மிதக்கும் போது!

மழை அழகு,
காற்றைக் கொண்டு
என் குடையை விசிறியெறிந்து
என்னை நனைக்கும் போது!

மழை அழகு,
பள்ளிச் சிறுமிகளின்
மழைக்கோட்டில் விழுந்து சறுக்கிச் சென்று
அவர்களின் கை நனைக்கும் போது!

மழை அழகு,
சாலையோர மலர்களின்
நறுமணத்தைக் களவாடி
துளிகளோடு காற்றில் தூவும் போது!

....

1 comment:

RaGhaV said...

கவிதை எப்போது அழகாகின்றது?

சந்தேகமேயில்ல மச்சி
நீ எழுதும்போதுதான்
:-)