Friday, September 7, 2012

சுழலும் சக்கரம்

கனவு காண்பதென்றால்
அத்தனை மகிழ்ச்சி
பொடியனுக்கு!

கற்பனை
அவனுக்குத் தானாய் வந்து கொட்டும்.

பனிரெண்டாம் வகுப்பு
இறுதித் தேர்வில் பொடியன்,
இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்
விடையளிக்கும் கேள்விக்கு
சிந்தித்தான்,
சிந்தித்தான்,
சிந்தித்துக் கொண்டே இருந்தான்.

பொடியன் அறிவான்,
தன் விடைகளின் மதிப்பெண்கள்
நான்கு சுவருக்குள்
தேநீரும் வடையும் பிஸ்கோத்தும்
மற்ற சில விடைத்தாள்களும்
நிறைந்த மேசையில்
சிவப்போ அல்லது பச்சை நிற மையோ
கொண்டு நிரப்பப்படும் என்பதும்,
தன் விடைத்தாளை
எடுக்கும் நேரத்தில்
திருத்துபவரின் தலைக்கு மேல்
வீடு அமர்ந்திருக்கும்
கிரகங்களின் நிலையைப்
பொறுத்தே அந்த மதிப்பெண்ணும்
அமையும் என்பதும்.

இருந்தும்,
புதிதுபுதிதாய் சிந்தித்தான்
விதவிதமாய்  கற்பனை செய்தான்
என்னவெல்லாம் எழுதலாம் என்று திட்டமிட்டான்.

தேர்வு முடிய அரைமணி நேரம் முன்
அடித்த முதல் மணி
பொடனி வழியே
சுயநினைவைக் கொண்டு வந்து சேர்த்தது
பொடியனுக்கு!

சிந்தித்த நேரம்
விரயம் விரயம்
என நொந்து
அரைமணி நேரத்தில்
இயன்றதை எழுதி சமர்ப்பித்தான்
பாவம்.

இப்போது
இன்று
வாழ்க்கையை எப்படி எல்லாம்
வாழலாம் என்று
கற்பனை செய்து
திட்டம் வரைந்து கொண்டு இருக்கிறான்
பொடியன்!

பாவம்
எப்போது அடிக்குமோ தெரியாது
அல்லது அடிக்குமோ அடிக்காதோ தெரியாது
அந்த முதல் மணி!
                                                                                        -கிர்பால்

1 comment:

Shakthi said...

I liked this Kirpal.. Many of us living same :)