
ஆச்சர்யப்பட்டேன்!
யார் காணாமல் போனாலும்
அறிவிக்கும்
தொலைக்காட்சிப் பெட்டியைக் கண்டு...
பக்கத்துத் தெரு
கோவிந்து மாமா காணாமல் போனபோதுகூட
அறிவித்திற்று!
தெருவே அதை
அரிதாகவும் பரபரப்பாகவும்
பேசிக்கொண்ட போது
அம்மாவிடம் கேட்டேன்,
'காணாம போன என்னோட சிலேட்ட ஏம்மா
காட்டமாட்டேங்குது?'
அம்மா சொன்னாள்,
'மனுசங்க காணாமப் போனா மட்டுந்தான்டா
சொல்லும்'.
ஆர்வம் பொங்கிய
நாள் ஒன்றில்
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புக்குச்
சற்று முன்
கட்டிலுக்குக் கீழே ஒளிந்து கொண்டேன்!
கற்பனையில்
கேட்டு ரசித்தேன்,
'காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு...
பெயர், கிர்பால்...
வயது, ஆறு...
காணாமல் போன போது
பச்சை நிற சட்டையும்
அரை டிரவுசரும் அணிந்திருந்தான்!'
புன்னகைத்தபடியே
காதைத் தீட்டி வைத்தேன்!
அறிவிப்பும் முடிந்தது
என் பெயரும் அறிவிக்கப்படவில்லை!
வெளியே எழுந்து சென்று
தொலைக்காட்சிப் பெட்டியைக்
கோபமாய் முறைத்துக் கொண்டிருந்தேன்!
எனைக் கண்டு
அம்மா கேட்டாள்,
'இத்தன நேரம் எங்கடா கண்ணு போயிருந்த?'
உள்ளிருந்து விம்மியபடியே
கண்ணீர் விட்டு அழத்தொடங்கியிருந்தேன்!