Saturday, November 2, 2013

இறைவனடி சேர்ந்தார் மாமா

காலையில் அம்மாவிடம் இருந்து அவசர அழைப்பு
ரமேஷ் மாமா காலைல வாந்தி எடுத்திருக்காரு
அப்படியே போய்ட்டாரு.
-சரியா கேக்கல,
இறந்துட்டார்டா.
...
...
ஹலோ, கேக்குதா?
...
...

நோய்ல படுத்த ஒடம்பு
நேரமாக்க வேண்டாம்னு
நாங்க வர்றதுக்குள்ள
இருக்கிறவங்கள வச்சு மதியம் ஒரு மணிக்கு எடுத்திட்டாங்க
மாலை அப்பா கொடுத்த தகவல்.
சே,
செத்தாலும் பண்டிகை அன்னிக்கு சாகக் கூடாது.

இருபது வருடங்களாக அவர் பட்ட வேதனை
இன்றோடு முடிந்தது
மாமா கேட்ட சாவு
ஒரு வழியாக இன்று வந்து சேர்ந்தது
என்னிடம் கண்ணீர் இல்லை,
மனதில் சோகம் இல்லை,
லேசாக ஏதோ ஒரு பாரம்.
தாத்தாவை நினைத்துக் கொண்டேன்.
டாக்டர் ஹாரூன் பிள்ளைக்குத் தகவல் சொல்லி
ஒரு நன்றிக் கடிதம் அனுப்பினேன்.


http://kirpalwonders.blogspot.com/2008/06/blog-post.html

Saturday, September 28, 2013

இறைவா உன்னிடம் இறைஞ்சுகிறேன்...

கலங்காத மனம்,
அனைவரிடமும் அன்பு,
தடங்கல் இல்லாத எண்ணம்,
தெளிவான சிந்தை,
உன் நல்ல படைப்புகளை நுகரும் புலன்கள்,
நேர்மை, பக்தி, கருணை
எல்லாம் அருள வேண்டுகிறேன் இறைவா
என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களுக்கு!

என்னைப் பற்றித்தான்
எந்தக் கவலையும் இல்லையே
உனக்கு!

Saturday, November 3, 2012

அவசரம், தயவுசெய்து அதற்கோர் பெயரிடுங்கள்

அது -

'செல்பேசி'
   - செல்லும்போது மட்டும்தான்
   பேச முடியுமா?
   அல்லது 'செல்' என்பது
   விரியும் அலைவரிசையின் எல்லைக்கோட்டைக் குறிக்கிறதா?
   இருந்தாலும்-
   தமிழில் பதம் வேண்டும்.

'செல்லிடைப்பேசி'?
   - 'இடை' கவர்ச்சிக்கு சேர்க்கப் பட்டதாக்கும்?
   வேறு?

'செல்லிடப்பேசி'?
   -ம்ம்ம்...
   செல்லும் இடமெல்லாம் பேசும் கருவியா?
   அல்லது
   செல்லும் இடத்தைப் பற்றி பேசும் கருவியா?
   கொஞ்சம் பொருந்தினாற் போல்  இருந்தாலும்
   முழுதும் ஒட்டவில்லை!

'செல்போன்'    - மன்னிக்கவும்
   'பஸ்'சைப் பேருந்தாக்கும் முயற்சியே
   இன்னும் தீரவில்லை
   எங்களுக்கு!
   தயவு செய்து தமிழில்,

'கைப்பேசி'?
   - தோள்பட்டைக்கும்
   காதுக்கும் இடையில்
   கவ்விக் கொண்டு
   கைகளில் கரண்டி பிடிக்கும்
   அம்மாக்களைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு - அது
   பெயர்ப்பொருள் உணர்வது கடினம்
   வேறொரு பெயர்?

 'அலைபேசி'?
   - 2 G கருவிக்கு 'அலைபேசி' என்றால்,
   3G கருவிக்கு 'அலையோஅலைபேசி'யா?
   சொற்களை முன்பின் இட்டுப் பார்த்தால் கூட
   பேசி அலைபவனைக் குறிக்கிறதே!
   வினையாகு பெயரா?
   வினையெச்சமா?
   ஐயோ, குழப்பாதீர்கள்.

ச்சே!
அன்றாடம் பயன்படுத்தும்
ஒரு கருவி - இதை
ஒரு தமிழனே கண்டுபிடித்து
'கிணிங்கிணி' என்று
பெயரிட்டு இருந்தாலும்
தேவலாம்!

   தயவுசெய்து
   நறுந்தமிழில்  
   பொருள் உணர்த்தும்
   ஒரே ஒரு பெயரிடுங்கள் - சீக்கிரம்
   உடனடியாக
   இளந்தமிழுக்கு
   ஒரு
   உபயமிடுங்கள்!

   உங்களுக்கு என்
   அடுத்த வேண்டுகோள்
   'ஸ்மார்ட் போன்'
!!!('அதிமேதாவியிடைபேசி?!!')

திருடர்கள் ஜாக்கிரதை

மரியாதைக்காக அல்ல - அது
பலர் பால் பொருள்படும்
பேருந்தில்
பக்கத்தில் நிற்பவள் - உன்
தோள்மீது மார்பு உரசுகையில் - கவனம்
த்ரிஷா அல்லது திவ்யாவுக்கு பதில்
உன் கைப்பையில் இருக்கும்
தீபாவளி முன்பணமும்
கடன் அட்டைகளும்
உன் நினைவில் வரட்டும்!

பிச்சிக்கிச்சு

நெடு நாட்கள்
கழித்தே தெரியும்
பௌதிகத்திற்கும்
கௌதமருக்கும்
ஒரு சம்பந்தமும் இல்லை என்பது

சந்தை

தண்ணீர் விற்பனைக்கு
விக்கல் இலவசம்

என் தாத்தா 80 ல் எழுதிய கவிதை

தினசரி நாட்காட்டியில்
ஆணி அடிக்கப் பட்டிருக்கும்
திகதிக் காகிதங்கள்
நம்பிக்கை
மாத நாட்காட்டியில்
தொக்கி நிற்கும் - அடுத்த ஆண்டின்
சனவரி மாதம்
தலைக்கனம்!

அவ பாக்குறா

தேனில் இருக்கும்
வண்டை
முகர்ந்து பார்க்கிறது
மலர்!

அஃறிணைகள்

என் அருமை
நண்பர்கள்,
என்னவாக ஆக
நினைத்தாலும்
'அது'வாகவே
ஆகி விடுகிறார்கள்!