Wednesday, December 31, 2008

நிலவுக்காக

முழு நிலவு
தேய் பிறை
வளர் பிறை
மீண்டும் முழு நிலவு
அத்தனையும்
நேற்று ஒரே இரவில்,
நீ
உன் போர்வையால்
மறைத்து, விலக்கி
முகம் காட்டியதால்!

Tuesday, November 4, 2008

காமுகம்

அன்று,
இரண்டொருவர் மட்டும் நடமாடும் அதிகாலைப் பனிவேளை,
ஓர் புறநகர்ச் சாலை -
அவள் பின்னால் அவன்!

காமத்தின் விசையால்
அவளை மோப்பம் பிடித்துக் கொண்டே
பின்தொடர்கிறான் அவன்!
அவள் பதுங்கிப் போனாலும்
அவன் விடுவதாயில்லை!

'வள்' என்கிறார் போல்
அவள் திரும்பிப் பார்த்தும்
சற்றே நின்று விட்டு
காமத்தின் கோரப்பற்களைக் காட்டுகின்றான்.

அவள் ஓட ஆரம்பிக்கின்றாள்,
அவன் துரத்த ஆரம்பிக்கின்றான்.

கொஞ்சம் தூரம் ஓடிய பின்
அதற்கு மேல் ஓட வழியின்றி நிற்கின்றார்கள்.
முட்டுச் சந்தில் அவளும் அவனும்
சில வீட்டு ஜன்னல்களும்.

மீண்டும் 'வள்' எனும் பார்வை.
ஆனால் இம்முறை,
அவன் மிகவும் தைரியமுடனும்
அனுபவத்துடனும்
பொறுமையுடனும் அவளை நெருங்கி
அவள் காதருகே நாசி வைத்து மோப்பம் பிடித்து
அப்படியே கீழே ஊர்ந்து வால் வரை சென்று..!
அவளால் ஏதும் செய்ய இயலவில்லை.
அதன்பின் அவனால் அவள் இயக்கப்படுகின்றாள், நெடுநேரம்!

ஜன்னலின் வழியே பார்த்துக் கொண்டிருக்கும்
ஒரு சிறுவனின் கண்களை மூடுகின்றாள் அவன் அம்மா

'ஏம்மா கண்ணப் பொத்துற?' என்கின்றவனிடம்,
'இரட்ட நாயப் பாத்தா படிப்பு வராதுடா கண்ணு! உள்ளே போ!' எனப் பிள்ளையைப் பண்படுத்துகின்றவளின் மனதுக்குள்,
'மார்கழி மாசம் வந்தாக்கா இந்த நாய்ங்களால இது ஒரு தொல்ல
இதுங்களப் புடிக்க மறுபடியும் கார்ப்பரேஷன்காரங்க வரக்கூடாதா?'

விலங்குகளை விலங்கினமாகவே வைத்திருக்க உதவுகின்றது காமம்!

Friday, June 27, 2008

தாத்தா

இனிதாய் முகம் மலர்ந்து சிரிக்கின்றார்.
புளியம்பட்டி போய் வருகிறேன் என்கிறார்.
திருப்பூர் வரை போக வேண்டும் என்கிறார்.
செல்பேசியில் அழைத்தவர் சும்மா கூப்பிட்டேன் என்கிறார்.
நலம் விசாரிக்கிறார்.
வரும் வரை வீட்டைப்பார்த்துக் கொள்ளச் சொன்னவர்
திரும்பாத இடம் சென்றார்.
அவர் சொன்ன செய்திகள் நூறு.

Friday, April 11, 2008

வெண்பாக்கள்

அப்பன் ஆத்தா சண்டைகள் ஓயவில்லை
பிள்ளை கண்ணீரில் வாடும் - இதுபோல்
வெப்பம் கருக்கும் மலர்கள் உயிர்தின்னும்
நச்சுக் கனிகளாய் மாறும்.

பிழைநீ பிழைநான் மண்மீது நின்றாடும்
பேய்கள் ஆசைகள் ஆகும் - மீண்டும்
பிழையோடு பிழைசேர்ந்து பிழைதான் பிறக்கும்
மனிதனை ஆசையே வெல்லும்.

"என்றும் நம் நினைவில் வாழும் எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்களுக்கு என் சமர்ப்பணம்"

Wednesday, March 26, 2008

வினைப்பயன்

பைக்கில் தன் காதலன் பின்னால்
அமர்ந்து செல்லும் பெண்போல் நாகரிகமாக,
பூங்காவில் தன் காதலனின் கைகோர்த்து
நடந்து செல்லும் பெண்போல் அன்பாக,
கடற்கரையில் தன் காதலனுடன் இணையாக
சிரித்துப் பேசும் பெண்போல் அழகாக,
இன்னும் சில தகுதிகளுடன்
எனக்கும் ஓர் காதலி வேண்டுமென்று
இறைவனிடம் வேண்டினேன்.
என் விருப்பப்படியே அருளினார்.
ஆனால் இப்பொழுது,
என் காதலியுடன் வெளியே செல்லும்போதெல்லாம்
கண்டவனும் அவளைப் பார்க்கிறான்.
என் வேதனையைச்
சென்று முறையிடும் முன்பே
இறைவன் எழுந்து ஓடிவிட்டான்!

Tuesday, March 25, 2008

மரம்

சாலையோரத்தில் நிற்கும் மரங்களெல்லாம்
எங்கோ பார்த்ததுபோலவே தோன்றும்.

'அசோகர் சாலையோரங்களில்
மரங்களை நட்டார்'.

தினசரியின் டெண்டர் அறிவிப்பில்
சாலையோர மரங்களை வெட்ட
விடப்பட்ட டெண்டரின் கீழே
நவீன நிழற்குடை அமைக்க டெண்டர்.
தார்ச்சாலை போட டெண்டர் என்றோ விடப்பட்டு விட்டது.

கதாநாயகன், கதாநாயகி மற்றும் குழுவினர்
பனிமழையிலும் பளபளக்கும் வெளிநாட்டுச் சாலைகளிலும்
குதித்துக் குதித்து பாடி ஆடுகிறார்கள்.

கிராமத்துக்கு வரும் நகரத்துப் பறவைகளை
எளிதில் கண்டு பிடித்து விடலாம் -
புளியமரச் சாலையை ஒட்டிச்செல்லும்
மின்கம்பிகளில் அமர்ந்திருக்கும்!

பல நகரத்துப் பள்ளிகளிலும்
குடியிருப்புகளிலும்
மரம் நடுவிழா கொண்டாடப்படுகின்றது.
சத்தமே இல்லாமல்
வயல்நிலங்களெல்லாம்
குறைந்த விலையில்
வீட்டுமனைகள் ஆகிக்கொண்டு இருக்கின்றன.

நான் முதன்முதல் கட்டும் வீட்டின்
முகப்பில் இடம் விட்டு
மரம் நடுவேன்.

பாடத்திட்டம் மாறாமல் இருந்தால்
என் குழந்தைகளும் கற்பர்
'அசோகர் சாலையோரங்களில் மரங்களை நட்டார்'.


மரங்களைப் பற்றி எஸ். இராமகிருஷ்ணனின் சுவாரஸ்யமான கட்டுரை இங்கே...

Wednesday, March 19, 2008

நிரைநேர் - மனது; நேர்நிரை - காகிதம்

தென்கிழக்கில் எழும்பி
வடமேற்கில் திரும்பி
கிழக்கு..
வடக்கு..
மேற்கு..
என்றவாறு திசைதோறும் சுற்றித் திரிந்து,
ஓடும் வாகனங்களைப் பின்னால் துரத்தி ஓடி,
அலைந்து, நெளிந்து, சுருண்டு,
காற்றில் மிதந்து,
சாலையில் சீறிவரும்
பேருந்தின் சக்கரங்களின் இடையில் பாய்ந்து,
அடியில் பதுங்கி,
சக்கரத்தில் சிக்கிச் சாகாமல்
பின்வழியே வெளியேறி
செருக்குடன் பறந்து வரும்!
பின்னால் வரும் இருசக்கர வாகனம்
தன் முன்சக்கரத்தில் பிடித்திழுத்து
சாலையின் மேல் சாத்தும்!
சில நொடிகள் திடுக்கிட்டு அசையாதிருந்து
மீண்டும்
தென்கிழக்கில் எழும்பி,
வடமேற்கில் திரும்பி...

நான்.. நீ.. காதல்...

காதலிக்கும் நோக்கம் இல்லையடி எனக்கு
ஆனால்,
உன்னோடு பேசிக்கொண்டே இருந்தாலோ,
உன் பொன்முகம் பார்த்துக்கொண்டே இருந்தாலோ,
காதலிக்கும் தகுதி பெற்று விட்டவனாய் கர்வம் கொள்கிறேன்.
மாயம் ஏதும் செய்வாயோ நீ?!

Sunday, March 16, 2008

தூரங்கள் கடந்தும் அவள் அன்பு!

மாத வட்டி கட்டியது
அக்காவுக்கு மாப்பிள்ளை பார்ப்பது
அப்பாவின் உடல்நல விசாரிப்பு
என
தொலைபேசியில் எல்லாம் பேசி முடித்தபின்
மறுமுனையில்
என்றும்போல் மறக்காமல் கேட்பாள்,
'சாப்பிட்டியா?'
-அவள் என் அம்மா!

பெண்ணழகு...

தான் அழகென்ற கர்வத்தால்
தன் கரம்பற்றப்
பேரழகும் பெருங்குணமும் பெற்ற
இளவரசன் வேண்டுமென்பாள்.
அவள் கர்வம்கூட அழகு தான்!

Wednesday, March 12, 2008

நான் என்றும் நானாக
வாழ்க்கை,
சில நேரம் இனிக்கின்றது
சில நேரம் கசக்கின்றது
சில நேரங்களில் மகிழ்ச்சியாய்
சில நேரங்களில் துன்பமாய்
இருப்பினும் என்றும் நான்
என் பாதையோரப் பூக்களைக் கண்டு
சின்னஞ்சிறு புன்முறுவல் பூக்கிறேன்!

மின்னும் நட்சத்திரங்களை
விரலால் தொட்டு எண்ணுகிறேன்!

கனவுகளில்
வானிலிருந்து கீழே விழுகிறேன்!

தேவதைகள் துரத்த
ஒளிந்து விளையாடுகிறேன்!

தூக்கிச் செல்வோர் முதுகின்மேல் எட்டிப்பார்க்கும்
பெயர் தெரியாத மழலைகளுக்கு
வாய் சுழித்து கண் சிமிட்டி
தெய்வப்புன்னகை தரிசிக்கிறேன்!

பேருந்தின் ஜன்னல் வழியே
உலகைப் புரட்டிப் படிக்கிறேன்!

இந்த உலகம் எனக்கும் சொந்தம் என்று
என்றும் நான்
நானாக வாழ்கின்றேன்!

Tuesday, March 11, 2008

சூரியன் நிலவு

நாம் இருவரும்
அதிசயமாய் பேசி மகிழ்வதைக் கண்டு
சூரியன் கன்னம் சிவந்து
தொடுவானத்தில் மெதுவாய் மறைகிறான்.
மறுபுறம் வெண்ணிலவு நம்மைப் பார்த்து புன்னகைக்கிறாள்!
நாம் பேசிக் கொண்டே இருக்கின்றோம்.

Friday, February 29, 2008

காதல்

அன்பே,
நீ பேசும் பொருளின்
ஆழம் புரிகின்றது எனக்கு.
ஒரு நிமிடம்,
அடுத்து ஒரு வார்த்தை நீ பேசும் முன்
உன் இதழ் பற்றி முத்தம் வைத்துக் கொள்கிறேன்
பின் உன் பேச்சைத் தொடரு
சலிக்காமல் கேட்கிறேன்.

அறிமுகம்

நானும்
கணிப்பொறியைத் திறந்து
வலைத்தளங்களுள் நுழைந்து
கண்முன் விரியும் புது உலகினுள் மேய்ந்து
தோன்றும் கருத்துக்கள் கூறி
தூற்றுவாரைத் தூற்றி
போற்றுவாரைப் போற்றி
போனவை வந்தவை என
யாவையும் போல,
உன்னையும் போல
பண்பட்ட மிருகம்!