Saturday, April 21, 2012

பரம பதம்

சுற்றமும் நட்பும் கூட்டி
பரம பதம் விளையாடுவான் பொடியன்.

புளியங்கொட்டை, செங்கல்,
பித்தளைக் கம்மல்
போன்ற அரிய பல காய்களுக்கு நடுவில்
எப்பொழுதும்
சிவப்பு நிற
சட்டைப் பொத்தான் பொடியனுடையது.

படிப் படியாய் ஏறி எல்லோருக்கும் முன்னால்
பரமன் பதம் தொட்டு விடுவான்
வழக்கமாக.

எப்போதும் முதலில் வெல்வதால்
அவன் ஆட்டமும் பாட்டமும் தாங்க முடியாதது...

சிவப்புப் பொத்தான் தொலைந்து போன
அந்த துரதிர்ஷ்ட நாளில் இருந்து
அவன் இறங்காத பாம்பில்லை!

எல்லோரும் மோட்சம் பெற்ற பிறகும்
நாலைந்து சுற்று சுற்றி வந்தே ஏறுவது என்றானது.

ஏழு பிறப்பிலும்
ஏழு கடல்,
ஏழு மலை தாண்டியும்
இனி
கிடைக்கக் கடினமானது,
யாரோ
கடித்துத் துப்பிவிட்ட
சிவப்புப் பொத்தான்.

பின் ஒரு நாள்,
"மோட்சமாவது
நாய் மூச்சாவாவது" என்று சொல்லி
கோபம் வந்து
கிழித்து எரிந்து விட்டான்
பரம பத அட்டையை!

இனி எவருக்கும் கிட்டப்பெறாததானது மோட்சம்..!

Friday, April 20, 2012

திராட்சைத் தோட்டத்துக் காற்று

திராட்சைத் தோட்டத்துக் காற்றை
நாசியில் நுகர்ந்தபடியே,
வாயை அகலப் பிளந்து
நாக்கை மடக்கி நக்கிப் பார்த்தான் பொடியன்...

நறுமணம் சுமந்து வந்த காற்றில்
திராட்சை ரசச் சுவை ஏன் இல்லாமல் போனது?

மீண்டும் நாசி நிறைய நறுமணத்தை நிரப்பிக் கொண்டு
உண்ணாமல் ஊர் சுற்ற ஓடிப் போனான்.

அவன் பின்னால் துரத்தி ஓடிப் போனது திராட்சைத் தோட்டத்துக் காற்று...