Saturday, April 21, 2012

பரம பதம்

சுற்றமும் நட்பும் கூட்டி
பரம பதம் விளையாடுவான் பொடியன்.

புளியங்கொட்டை, செங்கல்,
பித்தளைக் கம்மல்
போன்ற அரிய பல காய்களுக்கு நடுவில்
எப்பொழுதும்
சிவப்பு நிற
சட்டைப் பொத்தான் பொடியனுடையது.

படிப் படியாய் ஏறி எல்லோருக்கும் முன்னால்
பரமன் பதம் தொட்டு விடுவான்
வழக்கமாக.

எப்போதும் முதல் ஆளாய் வெல்வதால்
அவன் ஆட்டமும் பாட்டமும் தாங்க முடியாது முன்பு!

சிவப்பு நிற பொத்தான் தொலைந்து போன
அந்த துரதிர்ஷ்ட நாளில் இருந்து
அவன் இறங்காத பாம்பில்லை!

எல்லோரும் மோட்சம் பெற்ற பிறகும்
நாலைந்து சுற்று சுற்றி வந்தே ஏறுவது என்றானது.

ஏழு பிறப்பிலும்
ஏழு கடல்,
ஏழு மலை தாண்டியும்
இனி
கிடைக்கக் கடினமானது,
யாரோ
கடித்துத் துப்பிவிட்ட
சிவப்புப் பொத்தான்.

பின் ஒரு நாள்,
"மோட்சமாவது
நாய் மூச்சாவாவது" என்று சொல்லி
கோபம் வந்து
கிழித்து எரிந்து விட்டான்
பரம பத அட்டையை!

இனி எவருக்கும் கிட்டப்பெறாததானது மோட்சம்..!

No comments: